எழுதியவர் : புவனேஷ்வரன் ராஜசேகர்
செவ்வாயில் நீர் இருக்கிறது!
கணேசனுக்கு எல்லாம் முடிவை நெருங்குவதாகப்பட்டது. இது பூமிக்காக நடக்கும் போட்டியல்ல, செவ்வாயைக் கைப்பற்றுவதற்கான போட்டி. அதாவது இன்னும் தெளிவாகச்சொல்லவேண்டுமெனில், செவ்வாயிலிருந்து கொண்டு பூமியை வசப்படுத்துவது எளிது. காரணம் எங்கிருந்தோ ஒரு ப்ளாக் ஹோலைக் கண்டுபிடித்து கஷ்டப்பட்டு வந்து பூமியைத் தாக்குவதை விட, அருகிலிருக்கும் செவ்வாய் கிரகத்தை முதலில் கைப்பற்றினால் அங்கிருந்து பூமியை கைப்பற்றுவது மிகவும் எளிது. கையிலிருந்த சிகரெட்டும் கடைசி இழுப்புக்காகக் காத்திருந்தது. அதேசமயம் இவர்களின் உரையாடல்களில் கவனம் செலுத்திக்கொண்டிருந்தான் ஆண்ட்டோ.
ஆண்டோவிற்கு அதிர்ச்சியாக இருந்தது, இவர்களை உடனே கொன்றுவிட்டால் என்ன என்று பரபரப்பாக இருந்தது. அதேசமயம், தகவல் தரும் கருவி ஒரு செய்தியைத்துப்பியது. "நாங்கள் நெருங்கிவிட்டோம்" உடனே பரபரப்பாய் கிளம்பி அட்மின் பில்டிங்கிற்கு விரைந்தான்.
செவ்வாயின் குட்டி மாடலாக இருந்த இந்த 2 கிமீ நீளமுள்ள கிரகத்தின், லெவல் 4 எனப்பட்ட கடைசி 300வது மீட்டரில் பெண்கள் நின்றுகொண்டிருந்தனர். மாலதி பேசத்தொடங்கினாள், "இந்த தோல் எந்த மிருகத்தோடதுன்னு புரியல, ஆனா பார்க்க எதோ விசித்திரமானதுன்னு மட்டும் புரியுது, பார்க்க ஒரு மாதிரி மனுஷனோட தோலோட ஒத்தும் போகுது, ஆனா உயரம் கம்மியா கருநீலக்கலர்ல இருக்கு, இங்க பாரு நம்ம மார்பு மாதிரியே இந்த தோல்லயும் ஒரு வடிவம் இருக்கு"
சந்தியாவுக்கு ஒருவிஷயம் புரிந்துகொண்டிருந்தது. இங்கே ஒரு பில்டிங் இருக்கிறது, எனில் இங்கே கண்டிப்பாய் மனிதர்கள் இருப்பார்கள். அப்போது வித்யா வடிவில் இருந்த ரோபோவை தூக்கிக்கொண்டு போனது மனிதர்கள்தான் எனில், அவர்கள் சென்றுவர ராக்கெட் இயங்கவில்லை. காரணம் அந்த ஹெலிகாப்டர்கள்! எனவே இங்கே கட்டாயம் ப்ளாக் ஹோல் இருந்தாக வேண்டும். எங்கே தேடுவது??
ஆக்ஸிஜன் மாஸ்க் எடுக்காமல் ஓடிவந்தவன் மூச்சுத்திணறி மயக்கம் போட்டிருந்தான். குறுந்தாடி அவசர அவசரமாய் வெளியே ஓடி வந்து மாஸ்க்கை அணிவிக்கையில் அந்த இளைஞனின் நாடி அடங்கத்தொடங்கியிருந்தது. குறுந்தாடியின் கண்களில் கலவரம் தெரிந்தது. இனி பெண்களைத் தனியாக சமாளிப்பது கஷ்டம். ஆண்டோ வேறு எங்கே போய்த்தொலைந்தான் எனத்தெரியவில்லை. வேறு வழியில்லை, ப்ளாக் ஹோல் இருக்குமிடத்தின் கதவைத் திறந்து வெளியே போய், துணைக்கு யாரையும் அழைத்து வருவதைத் தவிர வேறு வழியில்லை. இப்படி ஒரு முடிவுடன் பில்டிங்கினுள் நுழைந்தான், பட்டனை அவன் நெருங்குகையில் அங்கே பெண்கள் ப்ளாக் ஹோலின் கதவை நெருங்கியிருந்தனர்.
விண்கலம் கிரகத்தின் வாசலில் இருந்தது. "ஆண்டோ எங்கிருக்கிறாய்"? 3வது முறையாக குரல் ஒலித்தது.
ப்ளாக் ஹோல் ஏன் திறந்தே இருக்கிறது என்று சந்தேகத்துடன் கிரகத்தினுள் நுழைந்து கொண்டிருந்தவனை 10 ஜோடிக்கண்களும் கண்டுபிடித்துவிட்டன. அனைவரின் மேல் இருந்ததும் விண்கலத்தில் இருந்த க்ரூக்ஸ் கிரகவாசிகளின் தோல்கள். இந்த கிரகத்தின் சோதனைக்காக வந்து அதன் உயிரை விட்டிருந்த வேற்றுக்கிரக உயிர்கள்.
கனேசன் ஆண்டோவைப் பின் தொடர்ந்து வந்திருந்தான், கிஷோகரின் கூற்று சரியாகத்தான் இருந்தது. ஒவ்வொருமுறையும் ஆண்டோ ராக்கெட்டில் பயணிக்க முடியாது, எனில் ப்ளாக் ஹோல் கட்டாயம் இருக்கவேண்டும், மாலினியின் வளர்ப்புத்தந்தை சொன்ன தகவல்களை வைத்துப் பார்த்தால் அந்த ஆராய்ச்சிக்கூடத்தின் தீட்சரேகைகள் ப்ளாக் ஹோலுக்கான வாய்ப்புகள் அதிகம் உள்ள பகுதி. விரைந்து வந்ததில் ஆண்டோ ப்ளாக் ஹோல் வழியாக நுழைவதைப் பார்க்கமுடிந்தது.
இனி நடக்கப்போவது கிட்டத்தட்ட போர், எதற்கும் தயாராய் இருக்கவேண்டும், ஸ்பேஸ் கன்கள் மட்டும் போதுமா எனத்தெரியவில்லை, "நையிராவிற்குத்தகவல் கொடு" கணேசன் கிஷோகருக்குக் கட்டளையிட்ட அதே விநாடி, அங்கே மாலதி கிசுகிசுத்துக்கொண்டிருந்தாள்.
"இப்ப இங்க சண்டைபோட்டு உயிரை விடலாமா? இல்லை முதலில் ப்ளாக் ஹோல் வழியா தப்பிச்சுப்போலாமா?" பெண்கள் யோசித்துக்கொண்டிருந்தனர்.
விண்கலம் அவசரமாகத் தரையிறங்கியது!!.........
(தொடரும்)
No comments :
Post a Comment