எழுதியவர் : கிஷோகர் டைனமோ
எதிர்பாத்துக்கொண்டு இருப்பது எல்லா நேரத்திலும் அப்படியே நடந்துவிடாது என்பது கொஞ்சம் கிளிஷேவான தத்துவம் தான், என்ன செய்வது ? பல சமயங்களில் அது தான் பொருந்திப்போகிறது. பாலகணேசன் காத்துக்கொண்டிருந்த அந்த செல்வாக்கான தொலைபேசி அழைப்பும் அந்த கிளிஷேவுக்குள் அடக்கம். "ஃபோன் பண்ணுகிறேன் என்று சொல்லிவிட்டு எந்த வேசி வீட்டில் கிடக்கிறானோ?" திட்டிக்கொண்டே தன் கைகளிலும் முழங்காலிலும் ஒட்டிக்கொண்ட மண்ணை தட்டிவிட்டான் கணேசன். பின்னால் "தொமுக்" சத்தம் சன்னமாய் கேட்டது, ஆயிற்று , மதில் தாண்டி கிஷோகரும் குதித்து விட்டான்.
மண்டிக்கிடந்த புதர்களை விலக்கி தாங்கள் வெளியே காத்துக்கிடந்த ஆச்சிரமத்தின் அந்த பெரும் கேட்டின் உள்பக்கத்தை ஆராய்ந்தான். ஒரு தெருநாய் முகத்தை சாவியாக்கி அந்த இரண்டு பெரும் கதவுகள் இணையும் இடத்தில் துளைத்து துளைத்து கதைவை திறந்து வெளியே ஓடியது.
"கேட்டை திறக்காதே கணேசா.... எலக்ட்ரிக் ஷாக் இருக்கலாம்" , சொன்ன கிஷோகரும் கணேசனுக்கு பின்னால் நின்று நாய் ஓடியதை பாத்துக்கொண்டு இருந்தான். கணேசனுக்கு திட்டுவதற்கு மூட் இல்லை. ஆச்சிரமத்தின் பிரதான மண்டபம் என்று அனுமானிக்ககூடிய ஒரு கட்டடத்தை நோக்கி நடந்தார்கள்.
கணேசனுக்கு புதிராக இருந்தது. தான் ஊகித்தது மட்டும் சரியாக இருந்தால் இந்த ஆச்சிரமம் உட்புகுவதற்கு இவளவு அனுகூலமாக இருந்திருக்க முடியாது. கிஷோகர் எசரித்த போது கூட அவன் கதவை தள்ளிப்பார்க்க தயங்கியதற்கு அதுவும் ஒரு காரணம். துப்பாக்கி ஏந்தி இல்லாவிட்டாலும் சரி , கம்புகள் தடிகளோடு சரி இரண்டு பேரையாவது எதிர்பார்த்தான், கூடவே கொஞ்சம் நாய்களையும். எதையும் காணோம். ஆனால் இன்னொன்றை கவனித்தான், சற்றைக்கு முன்னர் வரை இந்த இடம் பலத்த பாதுகாப்போடு இருந்ததற்கான ஒரு வாசத்தை அவன் நாசி நுகர்ந்துகொண்டிருந்தது. இந்த உணர்வுக்காக தான் இன்னமும் அவன் இந்த டிடக்டிவ் வேலையில் இருக்க முடிகிறது, இல்லையென்றால் அவன் நையிராவை அன்றிரவு.... வேண்டாம்! அப்போதே போயிருக்க வேண்டிய வேலை.
பச்சை வர்ணத்தில் இறுக்க பூட்டியிருந்த ஒரு கதவின் முன்னே நின்றுகொண்டிருக்கிறார்கள் இருவரும். கணேசன் இடதுகையால் கைத்துப்பாக்கியை பிடித்தபடி வலது கையின் ஆட்காட்டிவிரலால் கிஷோகரை சுட்டிக்காட்டி , பின்னர் ஆட்காட்டிவிரலையும் நடுவிரலையும் தனது கண்ணுக்கு நேரே கொண்டுவந்து திரும்ப ஆட்காட்டிவிரலை மட்டும் நீட்டி அந்த வீட்டின் ஜன்னலை சுட்டிக்காட்டினான்.
"என்னடா? என்றான் கிஷோகர் சத்தமாக.
"டேய் மூதேவி... உன்னைய அந்த ஜன்னல் வழியா பாக்க சொன்னேன்டா.... "
"அத இதோ இப்போ சொல்ற மாதிரி சொன்னா என்ன?"
கிஷோகருக்கு ஹாலிவூட் படங்களின் பரீட்சயம் போதாது என்பது கணேசனுக்கு எப்பவோ தெரியும்.
கணேசன் கதைவை மெதுவாக தள்ளிப்பார்த்தான். யார் கண்டார் இந்த தடவையும் ஒரு நாய் வெளியே வந்தாலும் வரலாம். ஆனால் கதவு பூட்டி இருந்தது. தட்டலாமா? தள்ளி திறக்கலாமா ? என்ற யோசனையில் இருக்கும் போதே "யாராச்சும் இருக்கீங்களா?" குரல் கொடுத்துவிட்டிருந்தான் கிஷோகர்.
சற்றைக்கும் உள்ளே காலடி ஓசை கேட்டது , நெருங்கி நெருங்கி இப்போது கதவருகில் கேட்டுக்கொண்டு இருந்தது. இதோ கதவுக்கு பக்கத்தில் என்ற நினைத்த மாத்திரத்தில் சத்தம் நின்று போனது.
"யாரு...?" இது உள்ளிருந்து. ஒரு வயதான பெண்ணின் குரல்.
"கொஞ்சம் பேசணும்" இது கணேசன்.
"நீங்க பேசுற மாதிரி இங்க யாரும் இல்ல"
"நாங்க டிடெக்டிவ்ஸ், கதவ தொறக்கிறீங்களா இல்லையா?"
ஏன்டா ? என்பது போல் கிஷோகரை பார்த்தான் பாலகணேசன். கிஷோகர் தனது இரண்டு தோள்பட்டைகளையும் ஒருதடவை தூக்கி இறக்கினான். வேறு வழியில்லை என்பது அதன் பொருள். உண்மை தான்.. வேறுவழியில்லை சொல்லியாக வேண்டும்.
"துப்பாக்கி இருக்கா?" - இது ஒரு கிழட்டு ஆண் குரல் கதவுக்கு சற்று தூரமாய் உளிருந்து தான் கேட்கிறது.
கண்களை இடுக்கிக்கொண்டு தலையைத்திருப்பி கணேசனை பார்த்த பார்வையின் அர்த்தம் இது தான். 'என்னடா இவன் கூமுட்டையா இருக்கான்? எல்லாரும் க்ரெடென்ஷியல் தான் கேப்பாங்க .... இவன் துப்பாக்கி இருக்கான்னு கேக்குறான்?"
கதவில் பொருத்தப்பட்டிருந்த உள்ளிருந்து வெளியே பார்க்க கூடியதாக்கும் அந்த லென்சின் வழியே தன் துப்பாக்கியை நீட்டிப்பிடித்தான் கணேசன். கதவு திறந்து கொண்டது.
அது ஒரு விசாலமான ஹால், இது இருந்தது , அது இருந்தது , என்ற வர்ணனை எல்லாம் அனாவசியம். ஒரு ஹால் என்றால் கற்பனைக்கு வரும் அத்தனையும் அங்கே இருந்தது. காந்தி ஃபோட்டோ , நமீதா போஸ்டர்கள் மிஸ்ஸிங். மற்றப்படி எல்லாம் இருந்தது.
"நான் நேரா விஷயத்துக்கு வாரேன்.... இங்க மாலினியோட பேரன்ட்ஸ் யாரு....?"
கிழவன் திரும்பி கிழவியை பார்த்துக்கொண்டான். அவள் கண்களில் ஒரு சூனியம் மட்டும் தெரிந்தது, அதில் எதையும் வாசித்தறிய முடியாததால் கணேசன் திரும்ப கிழவன் பக்கம் திரும்பிக்கொண்டான்.
"இப்போதைக்கு நாங்க தான்...."
"புரியல..."
"மாலினியோட ஒரிஜினல் பேரன்ட்ஸ் நாங்க கிடையாது"
"அப்புறம்?"
"நாங்க கார்டியன்ஸ்...." "நாங்க மட்டுமில்ல இங்க இருந்த எல்லாருமே கார்டியன்ஸ் தான்"
"பெரியவரே... ரொம்ப குழப்புறீங்க"
"உங்க துப்பாக்கிய கொஞ்சம் கிட்டத்துல பாக்கலாமா?" "பரவாயில்லை ஸ்பேஸ் மோட ரிமூவ் பண்ணிட்டே குடுங்க"
இந்தாளுக்கு ஸ்பேஸ் மோட் எப்படித்தெரியும் என்கிற அதிர்ச்சி டிடக்டிவ்ஸ் இருவர் முகத்திலும் வெளிர் ரேகையாய் ஓடியது.
மறுபேச்சின்று துப்பாக்கியை கொடுத்தான் கணேசன், ஸ்பேஸ் மோட் ரிமூவ் பண்ண்ப்படவில்லை , கிஷோகரின் விரல் ட்ரிகரில் இருந்தது. "கிழவன் கொஞ்சம் துப்பாக்யை உயர்த்தினாலும் அந்த முன்மயிர் கொட்டிய வழுக்கை தலையில் இரண்டு புல்லட்டையாவது குறைந்தபட்சம் இறக்கு" அவன் டிடக்டிவ் புத்தி கட்டளையிட்டுக்கொண்டிருந்தது. ஆனால் கிழவன் துப்பாக்கியை ஆரய்ந்துவிட்டு "அற்புதம்" என்று மட்டும் சொல்லி திரும்ப கொடுத்துவிட்டான்.
"பெரியவரே.... மாலினி....." இது கணேசன்.
வேலையில் மட்டுமே கணேசன் கண்ணாய் இருப்பது அரிது. கிஷோகர் ஆச்சரியப்பட்டுக்கொண்டான். ஒன்றும் பிரம்மாதமில்லை, கிழவனின் பீடிகையெல்லாம் அப்படி.
கிழவன் கிழவி இருந்த திசை பார்த்து "ஆம்" என்பது போல தலையை ஆட்டினான். கிழவி எழுந்து பக்கத்து அறைக்கதவை திறந்துகொண்டு உள்ளே போனாள். சற்றைக்கெல்லாம் இரண்டு போட்டோக்களோடு திரும்பினாள். கிழவன் வாங்கி அதை கணேசனுக்கு முன்னால் பரப்பினான். ஒரு போட்டோவில் , இரண்டு இளைஞர்கள், இருவருமே விஞ்ஞானிகளாக இருக்கவேண்டும். வெள்லைக்கோட்டு போட்டு , டெஸ்டியூப் நிறைந்த ஒரு அறையில் நிச்சயம் ஒரு ட்ராஃபிக் கான்ஸ்டபிள் நிற்கவோ வேறெந்த தொழில்செய்வோருமோ நிற்கவோ வாய்ப்பே இல்லை. ஆக விஞ்ஞானிகள் தான். அடுத்த ஃபோட்டோ ஒரு குரூப் போட்டோ , ஆனால் அசாதாரணமாக இருந்தது.
"கணேசா இருடா.... " - இது கிஷோகர். சொல்லிய அவசரத்தில் தனது டப்பில் அவசர அவசரமாக எதையோ தேடினான்.
என்ன என்பது போல முகத்தை கேள்விக்குறி செய்து டப்பையே பார்த்துக்கொண்டிருந்தான், கணேசன். கிழவனும் கிழவியும் கூட ஆர்வம் காட்டினார்கள்.
"இங்க பாரு... இது நீ கலெக்ட் பண்ண சொன்ன டீ கடைக்கு முன்னால இருந்த சிசிடிவி கமிராவுல பதிவான அந்த சிகரெட் விட்ட ஆசாமியோட போட்டோ...." "தோ.... இந்த போட்டோ அன்னிக்கு செத்துக்கிடந்திச்சே ஒரு பொண்ணு , அந்த டெட் பாடி போட்டோ "
"அதுக்கு இப்போ என்னாடா?'
"டேய்.... நல்லா பாருடா , அந்த டீக்கடை ஆசாமியோட முகம் இன்னொரு சிசிடிவிலயும் லிங் ஆகி இருக்கு, அங்க அவன் கூட நிக்கிற மற்ற ஆசாமி தான் இதோ இந்த ரெண்டு விஞ்ஞானிகள்ள ஒருத்தன்" " இந்த டெட்பாடி மூஞ்சியும் இதோ இந்த குரூப் ஃபோட்டோவுல இருக்கிற மூணாவது பொணோட முகமும் மேட்ச் ஆகுது..."
"ஆன்டோ..." கிழவன் சொல்லிக்கொண்டே கொஞ்சம் நிமிர்ந்து உட்கார்ந்தான், அந்த நிமிர்தலில் நிச்சயம் ஒரு கம்பீரம் இருக்கவில்லை. இனம்புரியாத ஒரு அச்சமும் , இயலாமையும் வெளிப்பட்டதை இரண்டு டிடக்டிவ்ஸும் கவனிக்க தவறவில்லை.
மேலே பேசு... என்பது போல் கிழவனின் முகத்தை பார்த்தான் கிஷோகர்.
தம்பி நானும் ஒரு விஞ்ஞானி தான், அதோ அந்த ஃபோட்டோவுல ஆன்டோ கூட இருக்கிறது நான் தான்.
எங்கேயோ இடித்தது, ஆன்டோ என சொல்லப்பட்டவன் இளமையாக இருந்தான். இதோ இந்த போட்டோவில் இருப்பது போலவே . ஆனால் இந்த கிழவன் தான் போட்டோவில் இருக்கும் மற்ற விஞ்ஞானி என்றால் ஆன்டோவுக்கும் இப்போது வயசாகி இருக்க வேண்டுமே ? அல்லது ஆன்டோவோடு இருப்பது கிழவன் இல்லையா? வேறு யாரோ ஆளா?
இவர்கள் நெற்றிச்சுருக்கங்கள் கிளப்பிய கேள்வியை புரிந்துவிட்டவனை போல கிழவன் சொன்னான் " ஆன்டோவுக்கு நூற்றிமுப்பது வயது " "அவன் எப்போதும் இப்படியே தான் இருப்பான், சாகும் வரை"
எதோ ஒரு நூலைப்பிடித்து சரியான வழியில் போய்க்கொண்டிருக்கிறோம் என்று கொஞ்சம் ஆசுவாசிக்கொண்டிருந்த டிடக்டிவ்ஸ் இருவரும் உண்மையில் சோர்ந்துபோனார்கள். ஒரு பைத்தியத்திடம் மாட்டிவிட்டோமோ என்று நினைத்துப்பார்க்கும் போது அவர்களுக்கு மிகுந்த சித்தவியாகூலமாக இருந்தது.
நம்பிக்கையின்மையை மிகத்தெளிவாக முகத்தில் காட்டிகொண்டு கிழவனை பார்த்தார்கள் இருவரும். ஆனால் கிழவன் முகத்தில் அப்படியொரு இறுக்கம் தெரிந்த்து, அந்த இறுக்கம் நிறைய உண்மைகளால் கட்டப்பட்டு இருந்தது போல இருந்தது.
"ஆன்டோ... எதிர்காலத்தில் இருந்து வந்தவன் , அவன் காலத்தில உடலை இளமையா வச்சிக்கிற முறை சாத்தியம். அதனால தான் அவனால் அந்த இளமையை மெயின்டெயின் பண்ண முடியுது. அது இங்கே ஒரு பிரச்சினையே இல்ல.... கிட்டத்தட்ட இருபத்து நாலு வருஷத்துக்கு முன்னாடி நான் சீனியர் ஹாஸ்பிட்டல்ல பிறப்பு நோய்கள் சம்மந்தமா ஆராட்சி பண்ணிட்டு இருந்தப்போ தான் எனக்கு ஆன்டோவோட அறிமுகம் கிடச்சிது. ஆரம்பத்துல அவனோட டைம் ட்ராவெல் கதைகள் எனக்கு நம்பிக்கை இல்லன்னாலும் போக போக உண்மைன்னு தெரிஞ்சிக்கிட்டேன். ஒரு ஆராட்சி பத்தி சொன்னான், கொழந்தைகள வச்சி.... அதுவும் பெண் குழந்தைகள். பன்ரெண்டு குழந்தைகள் வேணும்னு சொன்னான். ஏதோ தப்பாவே பட்டிச்சி... ஆனா... ஆராட்சி முடிவுல எனக்கு நிறைய புகழ் வரும்ன்னான்.ஒத்துக்கிட்டேன் "
ஒரே மூச்சில் சொல்லிவிட்டு கொஞ்சம் தண்ணீர் எடுத்து குடித்துக்கொண்டார் கிழவர். "ன்" விகுதி இப்போது சேர்க்க முடியாது. விஞ்ஞானி என்று தெரிந்துவிட்டதே, ஒரு எழுத்தியல் மரியாதைக்காகவாது "ர்" விகுதி சேர்த்தாக வேண்டுமே.
" அவன் பிளான் படி பன்ரெண்டு பெண் குழந்தைகள் ஒரே நாள்ல பிறக்கிற மாதிரி எல்லா சயின்டிஃபிக் ஏற்பாடையும் நானே பண்ணினேன். இதுக்கு வசதியா அவன் சீனியரை கைக்குள்ள போட்டுகிட்டான். அவரு கிட்ட என்ன சொன்னானோ எனக்கு தெரியாது . ஆனா ரெண்டுகொழந்தைங்க ஒதோ நாளே டெலிவரி ஆயிடிச்சு, ஆனா அதை அவன் பெருசா எடுத்துக்கல.... "
"ஆமா.. ஏன் ஒரே நாள்..." குறுக்கே புகுந்தது கணேசன்.
"எந்த சயின்டிஃபிக் சோதனைக்கும் சோதனைப்பொருள்கள் ஒரே மாதிரி இருக்கணுங்கிறது அடிப்படை விதி தம்பி"
"அப்புறம்...?"
"பிறந்த எல்லா பெண் குழந்தைகளையும் அவங்க பேரன்ட்ஸ்கிட்ட இருந்து பிரிச்சு எங்க கண்காணிப்பு மட்டு இருக்கிறதுக்காக பன்ரெண்டு கார்டியன்ஸ் கிட்ட குடுத்து வளர்க்க வச்சோம். இங்க தான் எல்லாம் இருந்தாங்க, இங்க தான் அந்த குழந்தைகள வளர்த்தோம்... ஆரம்பத்துல மாலினிய வளர்க்க ஏற்பாடு பண்ணின ஒரு ஃபமிலி வேற ஏதோ காரணத்தால சூசைட் பண்ணிக்க , கடைசி நேரம் வேற வழியில்லாம என்னைய வளர்க்க சொன்னான் ஆன்டோ.."
கண்களை கொஞ்சம் அகல் திறந்து உட்கார்ந்தான் கணேசன், ஏதோ நெருங்கி வருவதாய் அவன் உள்ளுணர்வு சொல்லியது. இந்த உள்ளுணர்வு மட்டும் இல்லாவிட்டால் , அன்றைக்கு இரவு நயிராவை.... வேண்டாம், இந்த கதைக்கு அது அவசியமில்லை.
"அந்த பொண்னுங்களுக்கு ஒரே மாதிரியான எக்ஸ்பெரிமென்டல் மெடிசின்ஸ் குடுத்தோம் , குறிப்பா ஒரு விஷேச பிளட் குரூப்பும்......"
"ஆனா இதெல்லாம் எதுக்காக?"
"ஆன்டோ எதிர்காலத்துல இருந்து வந்திருக்கான், அவனோட ஆராட்சிகளுக்குன்னே விசேசமா தயாரான பொண்ணுங்க இவங்க... சீனியர் அப்புறம் மத்தவங்க கிட்ட ஒரு கேம் ஷோ வைக்க போறதா சொல்லி ஏமாத்திக்கிட்டு இருக்கான். ஆனா எனக்கு தான் உண்மை தெரியும். ஏமாந்த சீனியர் ஆன்டோவுக்கு தான் தான் பாஸ் என்ட நெனைப்புல இருக்காரு, உண்மையில் ஆன்டோ தான் எல்லாத்துக்குமே டாப். ஆனா... அந்த பொண்ணுங்கள வச்சி இவன் பண்ணுற ஆரட்சியை மத்தவங்க ஒரு கேம் ஷோவா பாக்குற மாதிரி செட்டப்பையும் செஞ்சிருக்கான், நெறைய கோடீஸ்வரங்க தங்கலோட பணத்தை கொட்டிக்கிட்டு இருக்காங்க. அவன் ஆராட்சிபண்ணுற அந்த விஷேச லொக்கேஷனுக்கு அடப்ட் ஆகிற மாதிரி இருக்க தான் அந்த எக்ஸ்பெரிமென்டல் மெடிசின்ஸ் அன்ட் பிளட் குரூப்"
"ஆமா அந்த லொக்கேஷன் எங்க இருக்கு?"
"அது க்ரூஸ் கிரகத்தில்"
"சரி... ஆனா எதுக்கு இந்த எக்ஸ்பெரிமென்ட்"
"ஆன்டோ எதிர்காலத்துல இருந்து வந்திருக்கான், தன்னோட காலத்துல தான் தான் பெரும் கோடீஸ்வரனா இருக்கணுங்கிறது தான் அவனோட நோக்கம்" " அதுக்கான ஏற்பாடுகள தான் இப்போ பண்ணிட்டு இருக்கான்"
"ஆமா... இங்க இருந்த மத்த கார்டியன்ஸ் எல்லாரும் எங்க? - ஏன் செக்கியூரிட்டியே இல்ல....?" கணேசன் இந்த கேள்வியை கேட்டது ஏதோ தொடர்பில்லாமல் இருப்பது போல இருந்தாலும் , பேசாமல் இருந்தான் கிஷோகர்.
"இருந்தாங்க.. இப்போ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி க்ரூஸ்ல இருந்து ரெட் அலார்ட் வந்திசு காலி பண்ணிட்டு போய்ட்டாங்க"
"உங்கள மட்டும்......"
"ஏன் விட்டு வச்சாங்கன்னா? என்னால ஆக வேண்டிய காரியம் ஒண்ணு இருக்கு ஆன்டோக்கு, அதனால தான்"
"அதுசரி... சாகப்போற நேரத்துல உண்மைய உளறுற தமிழ்சினிமா வில்லன் போல , கேட்ட ஒடன எல்லாம் சொல்றீங்களே , எதுக்கு?"
"என்னோட பாதுகாப்புக்கு"
"புரியல"
"தன்னோட வேலை முடிய ஆன்டோ எப்புடியும் என்னைய கொல்லுவான், தன்ன பத்தின உண்மைய இன்னொருத்தரு கிட்ட சொல்லியிருக்கேன்னு தெரிஞ்சா நிச்சயம் அது யாருன்னு கண்டுபிடிக்கும் வரைக்கும் நான் உசிரோட இருக்கிறது உத்தரவாதம்" " அந்த கேப்புல நீங்க ஆன்டோவோ அரஸ்ட் பண்ணுவீங்க இல்லன்னா கொல்லுவீங்கன்னு நம்புறேன்"
கிழவரே தொடர்ந்தார்.
"நீங்க ஸ்பேஸ் டிடக்டிவ்ஸ்ன்னு உங்க துப்பாக்கிய பாத்து தெரிஞ்சுக்கிட்டேன். ஆரம்பத்துல துப்பாக்கிய நீட்ட சொன்னதும் அதுக்கு தான்"
"அந்த டெட் பாடி பொண்ணு பத்தி ?"
"அவ வித்தியா, எங்க எக்ஸ்பெரிமென்டல் பொண்ணுல ஒண்ணு" அவளவு தான் எனக்கு தெரியும் ." ஆன்டோ பொண்ணுங்க விசயத்துல வீக்குன்னும் தெரியும்"
ம்ம்... இதை ஊகிக்க முடியாவிட்டால் கணேசனும் , கிஷோகரும் டிடக்டிவ் வேலையை விட்டு எங்கேயாவது ஃபேஸ்புக்கில் பதிவெழுத போகலாம்.
இப்போது கணேசன் கார்டியன்ஸ்சுக்கு என்னானது பற்றி கேட்ட கேள்வியாலும் அதன் தொடர்ச்சிகளாலும் தொடர்பறுந்து போன அந்த உரையாடலை உயிர்பித்தான் கிஷோகர்.
"ஆமா... ஆன்டோ ஏதோ பணக்காரனாக போறான்னு சொல்லிக்கொண்டு இருந்தீங்களே... என்ன மேட்டர் அது"
"அவன் எதிர்காலத்தோட ஒரு பொக்கிசத்த தேடி வந்திருக்கான். அவனோட காலத்துல அமேரிக்காவும் அதோட நேச நாடுகளும் , ரஷ்யாவும் அதோட நேச நாடுகளும் ஒண்னுக்கொண்ணு சண்டை போட்டுக்கிட்டு இருக்கிற விஷயத்த இன்னொரு கிரகத்துல தேடுறான். அதை கொண்டு போய் ஏதாவது ஒரு அணி கிட்ட குடுத்தா அந்த அணி தான் வல்லரசு , உலக ஆர்மி எல்லாமே.. இவனும் ஒலகத்தோட முதல் பணக்காரன் ஆயிடுவான்"
"என்ன தேடிட்டு இந்த எக்ஸ்பெரிமென்டல் எல்லாம் பண்ணிகிட்டு இருக்கான்?"
கிழவர் சில நாட்களுக்கு முன்னர் வந்த நாழிதளை விரித்துப்போட்டார்.
"செவ்வாயில் தண்ணீர் இருப்பதை நாஸா உறுதி செய்தது"
No comments :
Post a Comment