Monday, October 12, 2015

டிடக்டிவ் பாலகணேசன் - அத்தியாயம் 2

எழுதியவர் : கிஷோகர் டைனமோ

"ஏம்மா.. கொண்டையன் உன்னைய அடிச்சான்"? கேட்டது கருவண்டு. பதில் சொன்னது கதரீனா கயுஃப் .
கழுத அவ பேரு சுலுக்காணி தான். நம்ம டிடக்டிவ் பால கணேசன் தான் அவளுக்கு கதரீனா கயுஃப்னு பேரு வச்சது. ஒரு நாள் லீவுல ஊருக்க வந்தப்போ இந்த பொண்ணு தொலாவ புடிச்சி தண்ணி எறைக்கிறத பாத்தாரு, அதுக்கு மொதோ ராத்திரி தான் அந்த ஹிந்தி புள்ள கதரீனாவோட "மை நேம் இஸ் ஷீலா" பாட்ட பாத்திருந்தாரு. ஊர்ல செவப்பா இருந்தது அவ மட்டும்தாம்லா. அவ ஒரு செமக்கட்டன்னு நான் சொல்லலாமா? அட அவள அப்புடி சொல்லலாம்யா. அது போக கணேசன் சும்மாவே ஜொள்ளுப்பேர்வழி, ஊர்ல கத்ரீனா மேல காதலாகி கனிஞ்சு உருகிற ஆளுகள்ள கணேசனும் ஒருத்தரு. சும்மா சொல்லக்கூடாதுய்யா டிட்டர்ஜன்ட் கணேசன் மேல அந்த புள்ளைக்கும் ஒரு இது இருக்கத்தான் செய்யுது, அது அந்தப்புள்ள புருசன் மாரிமுத்துக்கு தெரியுமா தெரியாது.
"ஏம்மா , ஒன்னயந்தாம்மா.. கொண்டையன் அடிச்சானா? " இப்பவும் கருவண்டு தான். கணேசன் கதரீனாவையே வச்ச கண்ணு வாங்காம பாத்துக்கிட்டு நிக்கான்.
ஆமாங்கிற போல தலைய மட்டும் லேசா ஆட்டிக்கிடுதா கதரீனா.
"ஏ.. எவிடன்ஸ் வேணும்லா..." கணேசன் குறுக்கே பாய்ந்தான்.
"கொண்டையன் தானப்பா... பொளேர்ன்னு போட்டிருக்கானே" கூட்டத்துல துண்டு பீடில இனிமே இழுக்க மிச்சம் இல்லாத நேரம் , வாய் சுடுபட்ட பெருசு ஒண்ணு வசனம் பேசுது.
"எவெடென்ஸ் வேணும்லா..." திரும்ப கணேசன்.
" என்னப்பா நீயி....? அந்த மாரில்லாம் இங்க பண்ணிர முடியுமா?" கருவண்டுக்கு மட்டும் தான், கணேசனின் எவிடென்ஸ் ஆர்வம் புரிந்தது. ஏன்னா.. முன்னையும் ஒரு தடவ அந்த பேக்டரியோட‌ தெருமுக்குல கொண்டையன் அடிச்சிட்டான்னு யோகா தியாகு மல்லாக்க விழுந்து கிடந்தப்போ , அடிபட்டதுக்கு ஆதாரம் வேணும்னு சட்டைய கழட்டி முதுகு மேனில்லாம் பக்கம் பக்கமா மனப்பாடம் பண்னினவன் கணேசன். கணேசன் தன்னோட டிடக்டிவ் வேலைய படிச்சதே அந்த முதுகுல தானே.....
"என்னப்பா கணேசா... இந்த சில்லறப்பய தான் கேள்வியா கேட்டுக்கிட்டுக்கிடக்கான்... இவன விட வித்த தெரிஞ்சவன் நீ தானப்பா.... சும்மா அந்த சீரெட்ட புடிச்சிக்கிட்டே இருக்கியே" பரபரப்பா சைக்கிள்ள வந்து சம்மன் குடுத்த பெருசு தம்பங்குக்கும் வசனம் பேசுது.
இந்தா.. இந்தா... கட்டானுகன்னு காட்டிட்டானுக இல்ல. ஒரு பெரிய டிடக்டிவ் சீரெட்டு புடிச்சுக்கிட்டு ரோசன பண்றப்போ சில்ற கேள்வில்லாம் அவன் அஸிஸ்டென்டு தான் கேப்பாங்கிற அடிப்பட ஞானமே இல்லாத பயலுவளா இருக்கானுகளே.
"அட இருங்கப்பா... என்ன ஏதுன்னு அந்த பொண்ணே வெலாவாரியா சொல்லணுமால்லியா..... அதான் கருவண்டு கேக்கிறாப்லல்ல ? பின்ன எதுக்கு குதிக்கீரு?" இன்னும் ஒரு ப்ஃப் இழுக்கலாம்னு தெரிஞ்சும் கூட அந்த சிகரெட்ட காலுக்கு கீழ போட்டு மிதிச்சுக்கிட்டே கதரீனா கிட்ட வந்தான் கணேசன். அடியொட்ட சிகரெட்ட இழுத்து குடிக்கிறது டிடக்டிவ் லட்சணம் இல்லங்கிறது கணேசனோட அபிப்பிராயம்.
"ஏம்மா இம்புட்டு பேரு கேக்குறங்கல்லா.... உண்டு இல்ல சொல்லிட்டா மிச்ச சோலிய பாக்க தோதா இருக்குமே" கணேசன் இந்த மாதிரி காரியமா கேக்குறப்போ கூட அவன் கண்ணுல காதல் தெரிஞ்சிச்சி. நல்ல வேள பக்கத்துல நின்ன மாரிமுத்துக்கு தெரியல. படுபாவிப்பய அவன்.... ஒரு நா அவன் வீட்டு கொல்லப்புறத்துல ஒருத்தன் ராத்திரி குதிச்சான்னு , காட்டுத்தேக்கு மரத்துல கட்டி வச்சு அவன் குஞ்ச அறுத்துப்போட்டவன். நெசம் தேன்னு ஊருல பாதிப்பேரு சொல்லுறாக, ஆனா மாரிமுத்து காத மட்டும் தான் வெட்டினதாகவும் கேள்வி இருக்கு. குஞ்சோ, காதோ ? எதுவானா என்னையா ? அவன் வெட்டுவான் அது நெசம் தானே?
"ஆமாங்க அடிச்சாரு.." கதரீனா வாய் தொறந்துட்டாய்யா. அவ ஒதடு இருக்கே.. வேணாம் , இங்க அநாவசியம். தேவப்பட்டா பின்னால பாத்துக்கிரலாம்.
"இங்க தான்யா பிரச்சனையே இருக்கு..." கருவண்டு சொல்றான்.
"என்னடா?"இது கணேசன்.
"இல்ல குருவே , இத்தின நாளா பாருங்க கொண்டையன் அடிச்ச ஆளுக பூராமே ஆம்புளைக தான். யோகா தியாகு , மாதவன் , கேப்பியார் , சிவகொமாரு எல்லாருமே. இன்னொரு ஒத்தும என்னான்னா பூரா குடிகார பயலுக, ஊருக்கு உதவாத தறுதலைங்க. எப்போ பாரு மர்மமாவே திரிஞ்சிட்டிருக்க பயலுவ..."
அதென்னா உண்ம தான். மேல கருவண்டு சொன்ன பூரா பயலுகளும் கொண்டயன் கிட்ட அடிபட்டப்போ ஊருக்குதவாத சோக்களிகள கொண்டயன் தண்டிகிறான்னு ஊரே பேசிக்கிடிச்சு. ஒரு வெள்ளொக்கெழம கொண்டயன் கோவில்ல சாமி வந்து ஆடுன பூசாரியும் அத தானேய்யா சொன்னாரு. அன்னிக்கு கூட காணிக்கையா ஊரே சேந்து சாமி ஆசையா கேட்ட எச்டிசி ஃபோன் காணிக்கையா குடுத்துச்சே.
இங்க இந்த பூசாரி பத்தி சொல்லணுமே, மொரட்டு தேகம் , கடா மீசன்னு ஒரு பூசாரிக்கு உண்டான எல்லாம் வெளஞ்சு கிடக்குற ஆளு. கொஞ்ச நாளுக்கு முன்னாடி தான் இமய மலலருந்து வந்திருக்காரு. நடந்தது பத்தில்லாம் சொல்லுவாரு , அவரு சொன்னா சொன்னபோல நடக்கும். இந்த மாரி ஊரு நம்புது.
"ஆமாடா.... மொதோ தடவையா கொண்டையன் ஒரு பொண்ணுக்கு அடிச்சிருக்கானே...." கணேசன் ரெண்டு விரலால வாய மூடி புருத்வ‌த தூக்கிகிடுத்தான்.
"ஏம்மா.. எங்கின வச்சு கொண்டைய உன்னைய அடிச்சான்?"
"முதுகுல ஓங்கி அறங்சாருங்க, நெஞ்சே வெடிச்சிரும் போல இருந்திச்சு"
கணேசன் ஆர்வமாகி சிரிக்கிறத கருவண்டு கண்டுகிட்டான்.
"ஏம்மா... எங்கினன்னா எந்த எடத்துல வச்சு அடிச்சான்னு கேட்டாரு..."
எதுக்குடா கொழப்புறங்கிறமாதிரியே ஒரு பார்வ பாக்குறான் கணேசன். இப்போ கதரீனா பேசுது.
" அதான் அந்த ஃபேக்ட்ரி முக்குல வச்சி தான்"
சொல்லி முடிச்சதுதான்யா தாமதம் , "அங்கெல்லாம் நீ ஏன்டி போறன்னு" செவுட்டுலையே வச்சான் பாருங்க மாரிமுத்து ஒரு அற. அந்த அடிக்கு கொண்டையனே பரவால்லன்னு போயிருக்கும் கதரினாவுக்கு. அடிச்சவன் மேக்கொண்டு கணேசன் விசாரிக்க கதரீனாவ விடாம இழுத்துக்கிட்டே போய்ட்டான்.
"ஏம்பா.. ஊர்ல உள்ளவன் எல்லாம் அவளுக்கு அடிக்கான், கொண்டையன் அடிக்கப்பிடாதாப்பா" சொன்ன பெருசு கௌதம ஆதித்தன். மகா கேடி பேர்வழி. அந்த சாவுற வயசுலையும் காதல் கவிதைன்னு பச்ச பச்சையா ஊர் சொவத்துல ஏதுனாச்சும் எழுதி வச்சிருக்கும். டபுள் மீனிங்க் இல்ல, ட்ர்பிள் மீனிங்ல்லாம் பேசும். அதான் அந்த கெழம் சொன்ன மாத்திரமே கூடியிருந்த பூரா சனமும் "களுக்"ன்னு சிரிச்சிரிச்சு.
அன்னிக்கு ராவு....
கணேசன் , கருவண்டு ரோட்டோர கவுண்டரு மூணுபேரும் அந்த ஃபேக்டரிக்கு போற பிரதான முக்குல , செத்து சாஞ்சி கெடக்கிற ஒரு மரத்துல உக்காந்து இருக்காங்க. அந்த தெருமுக்க கண்காணிச்சு துப்பு துலக்கணும்ங்கிறது கணேசனோட ரோசன. கருவண்டு துண்டு பீடி பத்தவச்சிக்கிடுத்தான், கவுண்டரு அவன் ரெண்டு இழுப்பு இழுத்ததும் வரப்போற தன்னோட மொறைக்காக அவன் வாயையே பாத்துக்கிட்டு இருக்காரு. கணேசன் மட்டும் ஃபில்டர் வச்ச சீரெட்டு புடிச்சுக்கிட்டு இருக்கான். சீனியர் டிடக்டிவ்லா?
ரெண்டு இழுப்பு இழுத்து பொகைய ஊதி வெளிய விட்டு ஒரு கவளம் எச்சிய புளீச்சின்னு கொஞ்சம் தள்ளி துப்பிக்கொண்டே கணேசன் சொல்றான் " நம்ம கதரீனாவ பாக்குறப்போல்லாம் எனக்கு புல்லுக்கட்டு சீதா ஜோக்கு தான் ஞாபகம் வருதப்பா...." " ஒரு நா அவ கிட்டையே அந்த ஜோக்க சொல்லணும்.."
கருவண்டுக்கு அந்த ஜோக்கு நல்லாவே தெரியும், அதனால கன்னா பின்னான்னு சிரிச்சுக்கிட்டான் . ஆனாலும் "அது ஒண்ணும் அவ கிட்டசொல்ல வேணாம்"ன்னு கொஞ்சம் அழுத்தமா சொல்லிக்கிட்டான். கவுண்டருக்கு எதுவும் புரியல "என்னப்பா அது புல்லுக்கட்டு சீதா கதை"ன்னு ஆர்வமானாரு.
கணேசன் ஏழாவது பஃப் இழுத்துக்கிட்டு இருக்கிற நேரம் அந்த ஃபேக்டரில இருந்து ரெண்டு உருவம் கெளம்பி வெளிய போகுதுங்க. ஒண்ணு நேரா கணேசன் ஆளுக இருந்த இடம் வரைக்கும் வந்து , அந்த தெருமுக்குல திரும்பி அடுத்த பக்கமா சிட்டா மறையுது.
ரெண்டாவது உருவம் சொடல ரோடு பக்கமா ஒத்தயடி பாதைய புடிச்சு நடந்து , எருக்கல காடு தாண்டி , செவனாண்டியோட ஆட்டு பட்டிக்குள்ளாற பதுங்கி வந்து , அந்த எல்லப்பக்கமா இருந்த ஒரு வீட்டு சொவத்துக்குள்ள குதிக்குது . கோழிக்கூட்டுக்கு கணேசனோட அம்மா போட்டு வச்ச குண்டு பல்பு வெளிச்சம் மங்கலா அந்த உருவத்து மேல விழுது.... கண்ண கொஞ்சம் இடுக்கி பாத்தா , ஆத்தி நம்ம பூசாரி..........

No comments :

Post a Comment