Sunday, October 11, 2015

டிடக்டிவ் பாலகணேசன் - அத்தியாயம் 1

எழுதியவர் : சிவகுமார் கனகராஜ்

மொத அநியாயம் - அதாவது அத்தியாயம் :
சாதா கணேசன் டிடர்ஜண்ட் கணேசனாக எவ்வாறு மாறினான்? ஊர்ப்பக்கம் டிடக்டிவ் வாயில் நுழையாமல் இவ்வாறே அழைக்கிறார்கள். அவனின் கணக்குப்படி இதுவே பாதி வெற்றிதான். இவ்வீர வரலாற்றைப் புரிந்து கொள்ள குறைந்த பட்சம் மூன்று தலைமுறையேனும் பின்னோக்கிச் செல்ல வேண்டும் நீங்கள்.. ஆனால் கதை மொத்தமே பணிரெண்டோ பதிமூன்றோ அத்தியாயங்கள் தாம். அதிலும் எவ்வாறேகினும் ஐந்தாவது அத்தியாயம் வாக்கில் கதை திசை மாறும். பின் நொண்டும், தவழும் கடைசியில் படுத்தே விடும். ஆக மூன்று தலை முறை வேண்டாம். ஒரே தலை முறையோடு நிறுத்திக் கொள்வோம்.
பி.பி - பஞ்சாயத்து பழனிச்சாமி: கணேசனின் தந்தையார்.
------------------------------X----------------------------------------X--------------------------
தினமுரசு நாளேட்டுச் செய்தி:
வெறியம்பட்டி. கரூர் தாலுகா. திருச்சி மாவட்டம்.
நேற்று வெறியம்பட்டி அருகே நடந்த ஜல்லிக்கட்டில் ஒருவர் பலி. இருவர் படுகாயம். பலியான நபர் ஆட்டையம்பட்டியைச் சேர்ந்த பழனிச்சாமி ஆவார். (புகைப்படத்தில் மலர் மாலையுடன் சோகம் ததும்ப அவர் புன்னகைக்கும் காட்சி. கல்யாண ஆல்பத்தில் எடுக்கப்பட்டது.) மாட்டை அடக்கும் போது மாடு முட்டியதில் குடல் சரிந்து பரிதாபமாக இறந்தார்.
-----------------------------------------X--------------------------------------------X-----------
ஆட்டையம்பட்டியின் அறுபதாண்டு கால சரித்திரத்தில் ஊர்ப்பெயர் நாளேடுகளில் வந்த தினமது. நாளேடு அறியாத ஒரு உண்மை. அவர் சென்றது மாட்டை அடக்க அல்ல. ஒரு பஞ்சாயத்தின் பொருட்டு. தேமேயென்று செல்லாமல் கூட்டத்தைப் பிளந்து சென்று உள்நோக்கியவருக்கு திபுரு திபுரென்று வரும் காளை சற்று வியப்பை அளித்திருக்கக் கூடும். வியப்பு பயமாக மாறியிருந்த போது அவரும் காளையும் கட்டுப்பாட்டை இழந்திருந்தார்கள்.
அவிழ்ந்த வேட்டி குறித்துக் கவலைப்படவெல்லாம் நேரமின்றி நாலெட்டு போட்டிருப்பார். அந்தோ பரிதாபம் காளை தன் இலக்கை எட்டியிருந்தது. தன் வாழ்நாளில் தங்கம்மாவைத் தவிர வேறு யாரையும் தொட்டிருக்காத வேறு யாரிடமும் வசவு வாங்கியிருக்காத வேறு யாரிடமும் மாத்து வாங்கியிருக்காத பி.பி. என்கிற பஞ்சாயத்து பழனிச்சாமி நொடிப்பொழுதில் இறைவனடி சேர்ந்தார். அப்பொழுது கணேசன் சிறுவன். ஏதோ பச்சை மண் என்பார்களே, அது போல் இல்லாமல் மஞ்ச நஞ்சாக இருந்தான். நல்ல திருட்டு புத்தி. விபத்தை வீரச் சாவாக்கியதில் மிளிர்ந்தது அவன் மூளை.
ஒன்றா இரண்டா, எத்துணை பஞ்சாயத்துகள். எத்துணை களம். ஆயிற்று. அண்ணார் மறைந்திருக்கலாம், அவர் முடித்து வைத்த பஞ்சாயத்துக்கள் எச்சமாக அங்கொன்றும் இங்கொன்றுமாய் இன்றும் காணக் கிடைக்கும். அதோ, அந்த முக்கு வீட்டுக் கிழவி தக்கி முக்கியேனும் வாழ்கிறாளே, அதன் காரணம் பி.பி . கிழவியும் புருசனும் பெரு வாழ்வு வாழ்ந்தவர்கள் தான். வசதியாக. அவர்கள் மகன் மூவரிடம் தொழில் செய்ய கடன் வாங்கியிருந்தான். தொழில் உறங்கி வட்டி விழித்துக் கொண்டது. போதாத காலம் தான்.
உனக்கெவ்வளவுப்பா? இது பி.பி.
பத்தாயிரத்தி சொச்சம்ங்க.. வட்டியச் சேத்துனா..
அதெல்லாம் வேணாம் நிறுத்து. இந்தா பாரு மாமா, வயக்காட்ட அவம் பேர்ல எழுதி வச்சிரு.
ஏழு மணிக்கு மேல் பி.பியை அணை போட்டாலும் தடுக்க இயலாது. அது அவர் பசி நேரம். ஞாயம் என்பது சோ.மு சோ.பி படி மாற வல்லது. அதாவது சோத்துக்கு முன் மற்றும் சோத்துக்குப் பின்.
எனக்கு பதினாலாயிரம்க,
மாமா வீட்ட அவனுக்கு மாத்தி வுட்று. வட்டிக்குப் பத்து மாட்டையும் பத்தி வுட்று.
இதைக்கேட்ட மாத்திரத்தில் நெஞ்சைப் பிடித்து விழுந்த கெழம் பரலோகம் போய்ச் சேர்ந்தது. அப்பொழுது அவர் பி.பி.யைப் பார்த்த பார்வை இருக்கிறதே. இந்த தீர்க்கம் தீர்க்கம் என்பார்களே, உன்னைக் கொல்லாம விடமாட்டேன் எனும் கொலை வெறி தீர்க்கம். அது அவர் கண்களில் தென்பட்டது.
இதோ பி.பி.யின் வார்தைகளில் அச்சம்பவம். - மனுசன், ஒத்தச் சொல்லு கடன்னு கேட்ட உடனே தர்மத்துக்கு கட்டுப்பட்டு உசுர உட்டாண்டா. டேய், பி.பி என்ன கடங்காரனாச் சாவ உட்ராதடானு என் நெஞ்சுச் சட்டைய கொத்தாப் புடிச்சு உலுக்குன மாறி ஒரு பார்வை. உங்கொப்பன் கடனக் கட்டிப் போட்றா சின்ராசு என்று கூறி ஒட்டுமொத்த சொத்தையும் கை மாற்றி விட்டார். கிழவி இப்பொழுது தெருவில்.. இது போல் எத்துணை. ஹூம், வருமா அவர் போல்.
----------------------X---------------------------------X---------------------------------X------
தந்தையின் பஞ்சாயத்து திறமை கணேசனுக்கு ஆராய்தலில் வந்து சேர்ந்தது ஆச்சர்யமில்லை. லாஜிக் இடிக்கிறதோ? இடிக்கட்டுமே. என்ன குடியா முழுகப் போகிறது? டிடக்டிவ் என்று தலைப்பு வைத்தாகி விட்டது. கதை வேறு இல்லை. வேறென்னதான் செய்வதாம்?
கணேசன் சுஜாதவைப் படிக்க ஆரம்பித்திருந்தான். பால கணேசன் பால் கணேஷ் ஆகிவிட்டான். அதில் வரும் கணேசைப் போல் தன்னை எண்ண ஆரம்பித்தான். வசந்துக்கு எங்கே போவது? இருக்கிறான் ஒருவன். கருவண்டு. ஆஹா, ஆட்டத்தை ஆரம்பிக்க வேண்டியது தான்.
ஒரு சிறு முன்கதை : நாம் பஞ்சாயத்து பழனிச்சாமியைப் படித்துக் கொண்டிருந்த நேரத்தில், ஒரே பாராவில் கணேசன் பள்ளியை முடித்து பி.ஏ சேர்ந்து வெற்றிகரமாக மூன்று வருடம் கழித்தும் விட்டார் கல்லூரியில். பட்டம், அது யாருக்கு வேண்டும்?
கல்லூரியில் இருந்து அவர் வெற்றிகரமாக டின் டிடி டின் டிடி டின் டிடி வீணை இசை மனதில் நிறைந்திருக்க காற்றில் பெல்பாட்டம் படபடக்க கருவண்டு கணேஷின் பையை சுமந்து வர, சக்கரம் வைத்த தனது பொட்டியை ஸ்டைலாக உருட்டிக்கொண்டே ஊருக்குள் நடந்து வரும் அழகைக் காண கண் கோடியெல்லாம் தேவயில்லை. ஒன்றரைக் கண் இருந்தாலே போதுமானது. எங்கேயோ ரேடியோவில் ஒரு நாயகன் உதையமாகிறான் பாட்டு கரைந்து இரைந்து அவர் நடைக்கு மேலும் மெருகூட்டியது.
தங்கம்மா வீட்டில் போட்ட கூச்சலுக்கு அளவே இல்லை. ஊருக்குள் முதல் முறை பேண்ட் அணிந்து வந்தது ஒரு காரணமாய் இருக்கலாம்,
ஊக்கேலி நாயே. மொதல்ல அந்தக் கருமத்த மாத்தித் தொலடா, உங்கப்பன மாறியே பவுசா இருந்தர்லாம்னு பாக்கறியா? மொதல்ல இந்த தவுட்டப் போய் எருமத் தொட்டில கரைச்சுட்டு வாடா எரும என்று வாழ்த்தி அனுப்பினாள். பாவம், பெரும்போக்குப் பேர்வழிகள் அழிந்து விடுவார்கள் என்பது அவள் எண்ணம்.
ஏண்டா கருவண்டு, ஒரு டிடக்டிவ் எருமச் சாணி அள்ளலாமாடா?
அண்ணே, நாளப் பின்ன எரும தொலஞ்ச கேசெல்லாம் வந்தா எறங்கி வேல பாக்கனும்னே, எல்லாம் ஒரு அனுபவந்தான். சாணிச் சட்டியை அலுங்காமல் கணேஷிடம் நகர்த்தி வைத்தான் கருவண்டு.
ஆள் வளர்ந்த அளவிற்கு மூளை வளராத ஆள் கணேஷ் என்றால், மூளை வளர்ந்த அளவிற்கு ஆள் வளர்ச்சியில்லாதவன் கருவண்டு. மூணே முக்கால் அடி வாக்கில் இருப்பான்.
அப்பிடிங்கற, என்று செயலில் இறங்கும் போது அவசரமாக வந்து இறங்கினார் ரோட்டோரக் கவுண்டர். முகத்தில் பதட்டம் அப்பட்டமாகத் தெரிந்தது.
கணேசா, கொண்டையன் வேலையக் காமிச்சிட்டாண்டா மறுபடியும். படிச்ச பய நீயி, என்னான்னு வந்து பாருயா என்று கூறிக்கொண்டே சைக்கிளை எடுத்துக் கொண்டு விரைந்தார்.
கொண்டையன் அந்த ஊரின் துடியான சாமி. இரவு நேரத்தில் ஏதோ போலீஸ் கணக்காக அவர் ரவுண்ட்ஸ் வருவார் என்றும் குறுக்கே யாரும் வரும் பட்சத்தில் அவர்களை பொளேரென்று ஒரு அறை விடுவாரென்றும் நம்பவே தகாத பூசாரி பொன்னையன் கூறித் திரிகிறான். ஒன்று போல் அடி வாங்கிய எல்லோரும், இருட்டு, ஒரு உருவம், ஓங்கி அடிச்சது என்று எழுதி வைத்ததையே ஒப்பிக்கிறார்கள். குறிப்பாக அந்த ஆளரவமற்ற தோல் பதனிடும் கட்டிடத்தின் அருகிலியே இம்மாதிரியான தொடர் நிகழ்வுகள் அரங்கேறுகின்றன.
காமராசர் காலத்தில் நேருவால் ஆர்ப்பாட்டமாக அவ்வூரில் தொடங்கப்பட்ட தொழிற்சாலை. இப்பொழுது மர்ம இடமாக உருமாறி விட்டது. அந்திக்குப் பின் அங்கு யாரும் செல்வதில்லை.
லுங்கியை தொடைக்கு மேல் ஏத்திக்கட்டிக் கொண்டே, “கணேசன், கணேஷா மார்ற நேரம் வந்துருச்சுடா” என்ற பன்ச்சிற்கு அருகிலிருந்த எருமை தன் நாவால் கணேசனின் தொடையை நக்கி ஆமோதித்து வரவேற்றது.
தெறிக்க விடுவோம் இனி...

No comments :

Post a Comment