Wednesday, September 23, 2015

நரகம் 2 கி.மீ - எட்டாவது அத்தியாயம்

எழுதியவர் : கோபிநாத்

சீனியரிடமிருந்து கிளம்பிய ஆன்டோ பெரும் குழப்பத்தில் இருந்தான்.
சீனியர் ! ஹாஹாஹா. சீனியர்! சீனியர்!. இந்தமனித மனம் எவ்வளவு வேடிக்கையானது. அவரை அந்தப்பெயரிட்டு முதலில் அழைத்ததும் அவன்தான். இன்று அதுவே அவருக்கு மிகப்பெரிய கிரீடம்…
என்று அவர் நினைத்துக் கொண்டிருக்கிறார். ஏமாற்றுவது எவ்வளவு சுலபம்! அவன் காய்களில் ஒரு பிஷப் இந்த சீனியர். அவ்வளவே. தேவையெனில் பலி கொடுத்துவிடலாம்.
இரண்டு பெரும் தவறுகள் நடந்துவிட்டன. மாலினியை இறக்கவிட்டிருக்கக் கூடாது. இப்பொழுது வித்யா எனும் ரோபோவின் அக்குவேறு நிலை.
மொபைலை எடுத்துப்பார்த்தான்.
01.39
வழக்கமாக இரவு பத்து மணிக்கு வரும் அழைப்பு இன்று இன்னும் வரவில்லை. அதுவேறு அவன் குடலை முறுக்கியது. ம்ம்ம்... ஐம்பது வருடப் போராட்டம். ஒவ்வொரு காயாய் நிதானமாய் தெளிவாய் நகர்த்தி
ஆட்டத்தின் இறுதிக் கட்டத்திற்கு வந்தாயிற்று. கியாஸ் தியரியை நன்கறிந்தவன் அவன். அவனுக்கு கற்றுத் தந்த பிதாமகர்கள் அப்படிப்பட்டவர்கள்.
இந்தப்புள்ளியை தொடுவதற்கான அத்தனை கோடுகளையும் 24 ஆண்டுகளாக
வரைந்தவனும் அவனே. எட்வர்ட் ஜூக்கர்பெர்கையும் அவரின் எதிர்கால மனைவி கரெனையும் சந்திக்கவைக்கச்செய்த மாமா வேலைகள் நினைவுக்கு வந்து சிறிது மனம் லேசாகிற்று. புன்னகைத்துக்கொண்டான். அவனின் மிகப்பெரிய வெற்றிகளில் ஒன்று அது. அனுபவித்து செய்ததும் கூட.
மற்றொன்று மொபைல் ஃபோன். யோசித்தால் இன்னும் பல. மாயையின் பிடியில் மழுங்கிய மக்கள் தம்மைச் சுற்றி நிகழும் பல அமானுடங்களை உணரமறந்தனர். அதுவே அவன் விருப்பம்.
வெளியே வந்தவன் அண்ணாந்து வானத்தைப் பார்த்தான். இன்றென்னவோ வானம் தெளிவாக இருந்தது. அவனுக்கு இப்படி வெட்டவெளி இரவு நேரம் மிகப்பிடிக்கும். இதற்காகவே நகரத்தை விட்டு மிகவெளியே உள்ள இந்த வீடு. அரை ஏக்கரில் சுற்றிலும் மரங்கள் சூழ.
பதினைந்தடி முள்பதித்த சுவர்களுக்குள். மறைந்திருக்கும் ஆபத்துதவிகள். குரைக்காது சுற்றிவரும் சாதுபோல் முகம் கொண்டிருக்கும் ஜெனெடிக் வேட்டை நாய்கள். பேச்சுக்கு என்றல்ல. உண்மையிலேயே அவன் இருந்தாலும் இல்லாவிடினும் அனுமதியின்றி ஒரு ஈ காக்கை புக முடியாது.
எக்காலத்திலும் என்னாட்டிலும் அப்படித்தான். இன்று இவன் பெயர் ஆன்டோ. வெளிப்பார்வைக்கு ஒரு சராசரி சென்னைவாழ் தமிழ் இளைஞன். அவ்வளவே. உண்மையில் இவ்வுலகம் அவன்வழியே மட்டுமே நடந்திருக்கிறது 1945 முதல்.
நட்சத்திரங்கள். கோடி கோடிகளாய் இறைந்திருக்கும் நட்சத்திரங்கள். அவன் பார்வையில் அவை வேறு. அவற்றின் ரகசியம் அறிந்தவன் இப்பெரும் உலகில் அவன் மட்டுமே.
க்ர்ர்ர்ர்ர்.... இடதுகை சுட்டுவிரல் குறுகுறுத்தது. அவன் எதிர்பார்த்த அழைப்பு. மூன்றுமணி நேரம் தாமதமாய். முதல்முறை பயந்தான் இவ்வுலகை தன்போக்கில் மாற்றிய ஆன்டோ எனும் நூற்றிமுப்பது வயது இளைஞன்.
சத்தமின்றி அவன் மூளைக்குள் ஒலித்தது அக்குரல்.
" எல்லாம் சரியாப் போயிட்டிருக்கா..."
"ம்ம்ம்... ஒன்னும் பிரசனையில்லை".
"நாங்க கிட்ட வந்துட்டோம். இன்னும் பதின்ஞ்சு நாள்தான். க்ரூக்ஸ் கிரகத்துல முதல் சோதனை விண்கலம் இறங்குது. எல்லாம் வெற்றிகரமா நடந்தா இன்விசிபிள் மோட்ல வந்துக்கிட்ட இருக்கிற மற்ற ஆயிரத்தைன்னூறு கலங்களும்."
" ஒன்னும் கவலைப்படாதீங்க. எல்லாம் பர்ஃபெக்டா போயிக்கிட்டு இருக்கு. உங்க மூலக்கூறுகள் உடைய பரிசோதனைப் பெண்கள் அங்க இறங்கி ரெண்டு நாட்கள் ஆகுது."
" ம்ம்ம். குட். நூறுவருட திட்டமிடல். இறுதிக்கட்டம். தவறு நடக்க்க்கூடாது. என்ன செய்ய எங்க ஜெர்மினேஷன்க்கு உன்னத்தான் நம்பவேண்டியிருக்கு. அதுக்கான சூழல் பூமிங்கறதால. நீ செய்வேன்னு நினைக்கிறேன். அதுக்கான பரிசா சாக்க்கிடந்த உனக்கு நிரந்தர இளமையக் கொடுத்த எங்களால எதுவும் செய்யமுடியும்கறத மறந்துடாத. "
" கண்டிப்பா. நம்புங்க. எல்லாம் சரியாப் போயிக்கிட்டுருக்கு "
நிசப்தம். தொடர்பு துண்டிக்கப்பட்டது.
கிளம்பினான் ஆன்டோ. ஒரு சிறிய வேலை பாக்கி இருக்கிறது முடிக்கவேண்டியது.
----------------------------------------------------------------------------------------------------
ரோபோவைத் தூக்கிக்கொண்டு உள்ளே சென்ற இருவரையும் புதர்மறைவில் இருந்து பார்த்துக்கொண்டிருந்தனர் பெண்கள். திடீரென அழத் தொடங்கினாள் ஒருத்தி. பயம் பரவ அனைவரும் விசும்ப ஆரம்பித்தனர்.
மாலதிக்கும் பயமிருந்தாலும் வெளிக்காட்டவில்லை.
" ச்சூ! அழாதீங்க. இப்ப அழுது ஆகப்போறது ஒண்ணுமில்ல. இப்பதான் தைரியமா இருக்கணும்."
" இது வெறும் கேம் மாதிரி தெரியல. நம்மள வச்சு ஏதோ ஒரு மிகப்பெரிய விஷயம் நடந்துக்கிட்டு இருக்கு. எல்லாத்துக்கும் விடையும் மொதல்ல நமக்கு போட்டுக்கறதுக்கு உடையும் அந்த கட்டிட்த்துல கெடைக்கும்னு தோணுது. என் பின்னால வாங்க. "
புதரை விலக்கி எழுந்தவள் கையில் கொசகொசவென ஏதோ பட, உற்றுப்பார்த்தாள் மாலதி. கொத்து கொத்தாக பழுப்பு நிற பூக்கள். "
கொத்தாக பறித்துக் கொண்டார்கள் எல்லோரும்.
" உஷ்ஷ்!!! யாரும் சத்தம் போடாம என் பின்னால வாங்க. சந்தியா நீ கடைசியா வா. சுத்தி ஒரு கண் வச்சுக்கோ. " என்றபடி கட்டிட்த்தை நோக்கி மெதுவாக சென்றாள் மாலதி.
எண்ணம் முழுதும் திகிலோடு கையிலிருந்த பூக்களை கேடயம் போல் மார்பின் முன்னால் பிடித்தபடி நடந்தவள் விரல் நுனிகளிலிருந்து பச்சை படர ஆரம்பித்துக் கொண்டிருப்பதை கவனிக்கவில்லை.
-----------------------------------------------------------------------------------------------

தன்முன் பரப்பிக்கிடந்த படங்களையும், கசக்கியெறிந்த காகிதக்குப்பைகளையும் வெறித்தபடியே கையிலிருந்த நான்காவது லார்ஜின் மிச்சத்தையும் விழுங்கினான் பாலகணேசன்.
மாலதி, சந்தியா, மாலினி, தீபா, திவ்யா, சாக்ஷி, அனுஷா..........
என்ன தொடர்பு உங்களுக்குள் ? எங்கே இருக்கிறீர்கள் ??? இருக்கிறீர்களா இல்லை...??? ஹ்ம்ம்ம்ம்....
எல்லோர்க்கும் ஒரே வயது.
எல்லோரும் பெண்கள்.
எல்லோரும் அனாதைகள்.
எல்லோரும் அழகானவர்கள்.
எல்லோரும் திறமையானவர்கள்.
எல்லோரும் அபோவ் ஆவரேஜ் ஐக்யூ.
ம்ம்ம்... ஏதோ இடிக்கிறதே... என்ன.???
அப்புறம் கிசோகரிடம் ஏதோ ஒன்று கேட்டேனே... ஆங்.
அழைத்தான் கிசோகரை.
" கிசோகர் ! தூங்கிட்டியா"
" அடப்பாவி. மூணுமணிக்கு கால் பண்ணி கேக்கற கேள்வியா இது ??? "
" அவங்களோட மெடிக்கல் ஹிஸ்டரி கேட்டிருந்தேனே. மறந்துட்டியா..??? "
" ம்ம்ம்... மறக்கல்லாம் இல்ல... "
" கொஞ்சம் ஒடனே எடுத்துட்டு வாயேன். "
" இருந்தாத்தானே எடுத்துட்டு வர்றதுக்கு. "
" என்ன சொல்ற"
" ம்ம்ம்... நோ மெடிக்கல் ஹிஸ்டரி. இதுவரைக்கு ஆஸ்பத்திரி பக்கமே போனதில்ல. ஒரு தலைவலி, சளி, ஜூரம் கூட வந்த்தில்லை. "
" என்னது! இடியட். இத ஏன் எங்கிட்ட முன்னாலயே சொல்ல்ல...???
" சொல்றதுக்கு என்னா இருக்கு. நடுராத்திரில டார்ச்சர் பண்ணாத. "
" முட்டாள். முட்டாள். எதுவுமே இல்லைங்கிறதுதாண்டா எல்லாத்தையும்விட சந்தேகமான விஷயம். There is nothing in the world so squeaky perfect. "
அலைபேசியை எறிந்தவன் ஒரு முடிவோடு எழுந்தான். முதலில் மாலினியின் பெற்றோர்.
அறைக்கு வெளியே அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்த ஆன்டோ சிரித்துக்கொண்டான் சத்தமின்றி.
(தொடரும்)

No comments :

Post a Comment