எழுதியவர் : மாதவன் ஸ்ரீரங்கம்
மாலினி வெட்டுப்பட்டுத் துண்டாகி விழ, மாலதியும் மற்றவர்களும் ஒருநொடி வெலவெலத்துப்போனார்கள். கோர்த்திருந்த தங்கள் கைகளில் ரத்தச்சகதியாய் விழுந்த பிளவுண்ட உடலினை அதிர்ச்சியுடன் உதறிவிலகினார்கள். உச்சக்கட்ட பயத்தில் சொல்லிவைத்தாற்போல ஒரேநேரத்தில் அனைவரது அடிக்குரல்களிலிருந்தும் கூக்குரல் கிளம்பியது. புயற்காற்று அதிபயங்கரமாக மரங்களை அசைத்துக்கொண்டிருக்க, கருக்கல்கட்டி இருட்டிய மேகமூட்டம் சூழலை மேலும் அச்சுறுத்திக்கொண்டிருந்தது.
பெண்கள் எல்லோரும் திசைக்கொருவராய் அமர்ந்து அழுதுகொண்டிருக்க, வித்யாவின் அழுகை மட்டும் சற்று வித்தியாசமாயிருந்ததை கவனித்து வைத்துக்கொண்டாள் மாலதி. சட்டென்று அழுதுகொண்டிருப்பவர்களில் சந்ந்தியா மட்டும் எழுந்து தலைதெறிக்க காட்டைநோக்கி ஓட்டம்பிடித்தாள். மற்றவர்கள் அனைவரும் என்ன ஏதென்று பார்ப்பதற்குள் மாலதிக்கு அவள் வேகமாக ஓடுவதன் நோக்கம் ஓரளவு புரிந்துபோனது.
"வித்யா கம் வித் மீ. சந்தியா காட்டுக்குள்ள போறா. எப்டியாச்சும் அவளைத் தடுத்தாகனும் கமான் குவிக்" என்று அவசரமாக வித்யாவைப்பார்த்து கத்தியபடி மாலதியும் அந்தப்பெண்ணைத்தொடர்ந்து வேகமாக ஓடினாள். சற்றே தயக்கத்துடன் வித்யாவும் மாலதியைத்தொடர, முன்னால் ஓடிக்கொண்டிருந்த சந்தியா மான்போல துள்ளிக்குதித்து ஓடினாள். முனையில் முற்களுடனான செடிகொடிகள் அடர்ந்த அந்த காட்டிற்குள் ஓடுவது அத்தனை சுலபமாக இல்லை. மாலதி அடிக்கொருதரம் பின்புறம் திரும்பி வித்யா வருகிறாளா என்று பார்த்தபடியே ஓடினாள்.
எங்கோ தொலைவில் சில மிருகங்களின் மெல்லிய உருமலொலிகள் கேட்க, புஸ்புஸ்ஸென மூச்சிரைக்க ஓடிக்கொண்டிருந்தார்கள் மூவரும். கிட்டத்தட்ட காட்டின் விளிம்பைத் தொட்டதும் சந்தியா ஒருவிநாடி தயங்கினாள். இன்னும் சில அடிகளில் அவளை நெருங்கும் தொலைவிற்கு வந்ததும் மாலதி கத்தினாள்.
"சந்தியா ப்ளீஸ்... முட்டாள்தனமா எதும் செஞ்சிடாத நில்லு".
அவள் காதிலேயே வாங்காமல் மறுபடி ஓட்டமெடுக்க, அவள் தயங்கிய இடத்தை அடைந்தபோதுதான் மாலதி அந்த பெரிய பில்டிங்கைப்பார்த்தாள். பார்ப்பதற்கு பழங்கால பேய்ப்படங்களின் மாளிகை வடிவிலிருந்தது. இருண்ட வானில் மின்னல்கள் பூத்த பிண்ணனியிலிருந்த பில்டிங்கை பார்த்தபடியே சந்தியாவைத்தொடர்ந்தாள் மாலதி. காலடித்தடங்களின் ஓசையை வைத்து வித்யாவும் பின்தொடர்கிறாள் என்று புரிந்துகொண்டாள்.
ஆனால் இது என்ன ? ஏன் சந்தியா நேராக மாளிகையின் முன்பகுதிக்குச் செல்லாமல் பின்புறமாகச் செல்கிறாள் என்று குழப்பமாயிருந்தது மாலதிக்கு.
______________ _______________ ________________ ______
" புல்ஷிட்..." என்று சலித்துக்கொண்டான் குறுந்தாடி
"ஏன் என்னாச்சு"?
" பேக்சைடு கேமரா பிராப்ளமா இருக்கு சரி பண்ணனும்னு எவ்ளோ நாளா சொல்லிட்ருக்கேன். பாருங்க இப்ப நம்மால அவங்களை மானிட்டர் பண்ணமுடியல"
"ப்ரீயா விடு மேன்... எப்டியும் அங்கருந்து வெளிய வந்துதான ஆகனும்"? என்றார் க்ரூக்ஸ்.
" மெண்டல் மாதிரி பேசாதீங்க. பில்டிங்குள்ள நொழையறதுக்கு பின்பக்கத்துல ஒரு வழியிருக்கிறதை மறந்துட்டீங்களா? அவங்க உள்ள பூந்துட்டா அப்பறம் நம்ம வேலையெல்லாமே நாசமாயிடும். பில்டிங்குள்ள கேமராவும் இல்ல"
"எஸ் யு ஆர் ரைட். அதுக்குத்தான் அவங்க பாடில சிப் வைக்கலாம்னு சொன்னேன். மானிட்டர் பண்ண ஈஸியா இருந்திருக்கும். நீதான் வேணாம்னு சொன்ன"
"ஆமா... நம்ம அல்ரெடி மிருகங்க ஒடம்புல சிப் செட் பண்ணிருக்கோம். இவங்க ஒடம்புலயும் செட் பண்ணா ரொம்ப கொழப்பமாயிடும்னுதான் வேனாம்னு தடுத்தேன்"
"சரி விடு. லெவலை பாஸ் பண்ணிட்ட இல்ல ? கேரக்டர்ஸ் எல்லாம் பிரேமுக்குள்ள இருந்தாத்தான் கேம் கரெக்டா ரீச்சாவும்"
"அதெல்லாம் அந்த லூசு பிசாசு மாதிரி பில்டிங்கிட்ட வந்ததுமே செஞ்சிட்டேன். பட் இந்த பன்னி கேர்ள்ஸ் பில்டிங்கு பின்னாடி இவ்ளோ நேரமா என்னதான் செய்யிறாளுங்க"?
________________ _______________ ____________________
பாலகணேசன் சிகரெட்டை முழுதாய் முடியும் முன்பே ஆஷ்ட்ரேயில் நசுக்கினான். அவனை நிறைய கேள்விகளும் குழப்பங்களும் தின்றுகொண்டிருந்தன. நிச்சயம் இது சுலபத்தில் முடிந்துவிடப்போகிற கேஸ் அல்ல என்றுமட்டும் உள்ளுக்குள் ஒரு பல்லி கத்திக்கொண்டிருந்தது. கடைசியாக பார்த்துக்கொண்டிருந்த கொரியப்படத்தின் கிளைமாக்ஸை பார்க்கவிடாமல் செய்ததன் கோபம்வேறு நையிராவின்மீது சேர்ந்துகொண்டது.
கிஷோர் பட்டென்று கதவு திறந்துகொண்டு உள்ளே நுழைந்தான்.
" மேடம் கூப்பிடுறாங்க. ஏதோ அர்ஜண்ட்டாம் வா"
நையிராவின் அறைக்குள் செல்ல, அவள் அவசரமாகக்கிளம்பிக்கொண்டிருந்தாள்.
"என்னாங்க என்ன விசயம்"?
" இப்பத்தான் ஒரு இம்பர்மேஷன் வந்திச்சு. வாங்க போயிக்கிட்டே பேசுவோம்" என்றபடி போர்ட் பியஸ்டாவில் மூவரும் ஏறிக்கொள்ள, அனுபவமுள்ள டிரைவர் ரதம்போல காரை குலுங்காமல் விரட்டினார்.
பாலகணேசன் கேட்காமலே நையிரா சொன்னாள்.
"ரெட் ஹில்ஸ் போற வழில ஒரு பொண்ணோட பாடி கெடச்சிருக்காம் பாலா. நியூடா"
" ஓ காட் !!! யு மீன்"?.....
" எஸ் ஐ மீன் இட்"
"திஸ் கேஸ் இஸ் வெரி காம்ப்ளிகேட். நாம நெனைக்கிறபடி அது அந்தப்பொண்ணுங்கள் ல ஒருத்தியா இருந்திட்டா, கேஸ் ரொம்ப சிக்கலாயிடும்"
"புரியுது. பட் 24 வயசுல ஒரு பொண்ணு பொணமா அதும் அம்மணமா கெடக்குன்னா நம்ம நாடு எங்க போயிட்டிருக்கு பாலா ? நாம நாகரீகம் அடைஞ்சவங்கன்னு எதைவச்சு சொல்லிக்கிறோம்? நம்ம கற்கால மிருக குணம்லாம் நம்மவிட்டுப்போகவே போகாதா"?
" ஏன் போகனும் மேடம்"?
"புரியலை. என்ன பேசுற நீ ? உனக்கு வேண்டப்பட்ட ஒரு பொண்ணா இருந்தாலும் நீ இப்டித்தான் பேசுவ இல்லியா"?
" எனக்கு எல்லாரும் ஒன்னுதாங்க. எல்லாத்தையும் பிரிச்சுவச்சு, மூடிவச்சு இண்டர்ஸ்ட உருவாக்கிட்டு. இப்ப பொலம்பி என்னசெய்ய ? மூடுன எல்லாதையும் தொறந்து ஓப்பனா போட்டுட்டா எவனுக்கும் எதுலயும் இன்றஸ்ட் இல்லாம போயிரும். தொறந்து பார்க்க துடிக்கமாட்டான்"
"தொறந்துபோட்ட நாடு மட்டும் வாழ்ந்துச்சா"?
பாலகணேசன் பதில்பேசாமல் ஜன்னலில் வேகமாய் மறையும் கட்டிடங்களை பார்க்கத்துவங்கினான்.
________________ __________________ __________________
சந்தியாவைத்தொடர்ந்து மாளிகையின் பின்புறம் வந்த மாலதி திடுக்கிட்டாள். கட்டிடத்திற்குள் செல்லும் பாதைக்கு அருகே விழுந்துகிடந்தாள் சந்தியா. சட்டென்று ஒரு பரிதாபம் தோன்றியது. எங்கோ பிறந்து வளர்ந்து இப்படி குரூரம் பிடித்த வக்கிரர்களின் விகார ரசனைக்கு பலியாகிவிட்டோமே என்று நினைத்தபோது எல்லையற்ற ஆக்கிரோஷம் பீரிட்டது. மாலதி மெல்லத்தனது ஸ்வாசத்தை சீராக்கினாள். இங்கு உணர்ச்சிவசப்படுவது ஆபத்தைமட்டுமே வரவழைக்குமென்பதை அவள் உள்ளுணர்வு எச்சரித்தது.
சந்தியாவை தன் மடியில் கிடத்தி அவள் கன்னத்தைத் தட்டி தெளிவிக்க முயன்ற்கொண்டிருந்தபோது வித்யாவும் வந்து அருகில் அமர்ந்துகொண்டாள். துளிகூட வியர்க்காத, மூச்சிரைக்காத வித்யாவை ஒருகண்ணால் அளந்தபடியே சந்தியாவை எழுப்ப, சில விநாடிகளில் மயக்கம் தெளிந்த சந்தியா மறுபடி அடிவயிற்றிலிருந்து அழத்தொடங்கினாள். மூவரும் எழுந்துகொண்டு அங்கிருந்து நகரத்துவங்கியபோது சட்டென மாலதி ஒரு காரியம் செய்தாள். வித்யாவை பின்புறமாகக் கழுத்துடன் இறுக்கிப்பிடித்து நெரிக்கத்துவங்கினாள்.
"ஏ.....ழே...... ட்ர் ட்ர்... க்ர்... க்ர்... ஷே...." எனக்குழறலான சப்தங்கள் வந்தன வித்யாவிடமிருந்து. சந்தியா செய்வதறியாமல் பேந்தப்பேந்த விழித்துக்கொண்டிருக்க, மாலதி சத்தமிட்டாள்.
"சந்தியா அந்த மரப்பட்டைய எடு. இவளும் அந்த கோஷ்டியச்சேர்ந்தவதான். ம் சீக்கிரம் எடு"
சந்தியாவுக்கும் ஏதோ புரிந்திருக்கவேண்டும். அவசரமாக கீழே கிடந்த சில மரப்பட்டைகளை கயிறுபோலத்திரித்துக் கொண்டுவர, மாலதி வித்யாவை சுவருடன் நசுக்கி அவள் கைகளைப் பின்புறமாக இறுகக்கடினாள். பிறகு அவள் குரல்வளையை மெல்ல விடுவிக்க வித்யா உளறிய எதுவும் புரியவில்லை இருவருக்கும்.
"மரியாதையா உண்மையச்சொல்லிரு. உனக்கு என்னமோ தெரிஞ்சிருக்கு. யார் நீங்க ? எதுக்காக எங்களை இப்படி கடத்திவந்து அடைச்சி சித்திரவதை செய்யிறீங்க"?
சந்தியா பயத்துடனும் ஆச்சரியத்துடனும் மாலதியைப்பார்க்க, வித்யா டிஜிட்டல் குரலில் கரேல்முரேலென்று மறுபடி உளறிக்கொட்டினாள். கடுப்பான மாலதி வித்யாவின் அடிவயிற்றில் எட்டி ஒரு உதைவைக்க, வித்யா முன்புறமாகக்குனிந்தாள். அடுத்து முழங்காலால் அவள் முகத்தில் மேல்நோக்கி ஒரு ஷாட். நிமிர்ந்த வித்யாவின் தாவாங்கட்டை லைட்டாக சைடு வாங்கிக்கொண்டது.
இத்தனைக்கும் பதில்வராத கோபத்தில் வயிற்றில் ஓங்கி ஒரு குத்துவிட, திரும்பிவந்த மாலதியின் கைகளில் சிலபல வண்ணங்களில் விதவிதமான வயர்கள் நெளிந்தன. பிளந்திருந்த வித்யாவின் வயிற்றுப்பகுதியில் பாலியூரித்தின் சதைத்துனுக்குகளுக்கு மத்தியில் சில சிலிக்கான் வஸ்துக்களும், மெலிதான சின்னஞ்சிறிய லைட்டுகளும் ஸ்பார்க் ஆக மாலதியின் முகத்தில் புன்னகை படர்ந்தது. சந்தியா மிகுந்த கலவரத்துடன் அவள் கைகளைக்கோர்த்து நெருங்கி நின்றுகொண்டாள். தொலைவில் நிறைய காலடியோசைகள் கேடகத்துவங்கியது....
(தொடரும்)
உரலிகள் :-
No comments :
Post a Comment