Wednesday, September 23, 2015

நரகம் 2 கி.மீ - முதல் அத்தியாயம்

எழுதியவர் : கார்த்திக் மணி 

இயற்கை கொஞ்சம் அழகாகவும் இருக்கிறது. அதேசமயம் கொஞ்சம் கொடூரமாகவும் இருக்கிறது.
கும்மாயிங் மக்களே.
என்ற கத்தார் பாலகணேசனின் காலை வணக்கப்பதிவிற்கு 294 லைக்குகளும் இரண்டு கமெண்டுகளும் வந்திருந்தது.
தமிழகத்தில் சென்ற மாதம் ஆகஸ்டிலிருந்து இன்று செப்டம்பர் பதினொன்று வரை மூன்று இளம் வயது பெண்களைக் காணவில்லை. அவர்கள் மூவரும் தொலைந்து போனவர்களா அல்லது கடத்தப்பட்டவர்களா என்பது மர்மமாகவே உள்ளது.
காவல்துறை உறங்குகிறதா?
என்கிற சிவப்பு வண்ண டிபி பதிவிற்கு இதுவரை எந்த லைக்குகளையும் கமெண்டுகளையும் காணவில்லை.
நமது பூமிக்கு வெகு அருகாமையில் ஒரு புதிய கிரகம் சில நாட்களாக தோன்றுவதும் மறைவதுமாக இருக்கிறது என்று இந்திய வானவியல் விஞ்ஞானிகளின் கண்டு பிடிப்பிற்கு நாஸா இதுவரை எந்த மறுப்பையோ ஆமோதிப்பையோ வழங்காமல் அமைதியாக இருப்பது வருத்தத்தை அளிக்கிறது என்று இந்திய வானவியல் விஞ்ஞானி டாக்டர். யோகானந்த் தியாகராஜன் அவர்கள் இன்று நடந்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.
என்கிற ஆங்கில பதிவிற்கு லைக்குகள் இரண்டரை லகரத்தில் இருந்தது. கமெண்டுகள் முந்நூற்றி புள்ளி கே-வில் இருந்தது.
அதனை திறந்து கமெண்ட் செய்யலாமா அல்லது ஸ்க்ரோல் செய்யலாமா என்கிற சிந்தனையில் ஆன்றாய்டை நோண்டிக் கொண்டு நின்றிருந்தவளின் முன்னால் 'கூய்ங்ங்ங்' என்று ஹாரன் எழுப்பியவாறு பல்சர் 220 யில் ஹெல்மெட் அணிந்திருந்த இளைஞன்,
"மாலு, சாரி பார் த டிலே. வழியில ஒரே ட்ராபிக். சிக்னல் வேற. போலாமா?" என்றான்.
மாலு என்று அவனால் அழைக்கப்பட்ட அந்த ரோஸ் நிற ஆன்ட்றாய்ட் நோண்டியின் முழுப்பெயர் மாலதி. பில்லியனில் அமர்ந்ததும் ஆன்றாய்ட் கைநழுவி தரையில் விழுந்து சிதறியது.
"ஹேய் ஏன்டா செல்போனை தட்டி விட்ட?" என்று கதறினாள்.
"நானா? உளராத மாலு. நான் உன் போனை தட்டி விட்டத நீ பார்த்தியா?" என்று அவன் கூலாக பதிலளித்தான்.
"அதெல்லாம் எனக்குத் தெரியாது. நீதான் தட்டி விட்ட. நீதான் அத ஈடுகட்டனும்."
"ஈடுகட்டனும்ன்னா?"
"ப்ரான்ட் நியூ ஆன்றாய்ட். ஜஸ்ட் ஃபார்ட்டி நைன் தவுசன் நைன் ஹன்ரட் அண்ட் நைன்டி நைன் ஒன்லி" என்றாள்.
அவன் பதிலெதுவும் பேசாமல் கிக்கரை உதைத்தான்.
"செல்ஃப் எடுக்கலியா ஆன்ட்?" என்று அவனை கொஞ்சினாள்.
"எடுக்கல. பேட்டரி வீக். வேற என்ன?" என்றான் கோபமாக.
"கோபமா ஆன்ட்?"
"ச்சே ச்சே அதெல்லாம் உம்மேல கோபப்படுவேனா? லேட்டாயிடுச்சேன்னு டென்சன். அதான்."
"லேட்? எங்காவது முக்கியமான இடத்துக்கு போறோமா ஆன்ட்?" என்றாள் புரியாதவளாக.
"அது... வந்து... வரும்போதே ரொம்ப லேட் ஆச்சுல்ல. அதத்தான் சொன்னேன்." என்றான் ஆன்டோ. அவனது பதிலில் எதையோ பலமாய் மறைப்பது லேசாகக் கூட மாலதிக்கு புரியவில்லை.
"அப்பசரி. இப்ப எங்கே போயிட்டிருக்கோம் ஆன்ட்?"
"ஹ்ம்ம்ம் அப்டி கேள். உனக்கு செல்போன் வாங்க."
"வா....வ்" என்று அவனது முதுகில் முத்தமிட்டாள்.
மாலதியும், ஆன்டோவும் பைக்கில் பறந்து கொண்டிருந்த அந்த நொடியில் காவல்துறை அவசரமாக ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தது. அதில் காணாமல் போன பெண்களை மீட்க அல்லது கண்டுபிடிக்க போலீஸ் தனிப்படையை அமைத்துக் கொண்டிருந்தது. ஏனென்றால் தொலைந்து போனது மூன்றல்ல பத்து. ஒருவருக்கொருவர் சம்பந்தமில்லாமல் வேறு வேறு ஊர்களில் ரேண்டமாக காணாமல் போவது உறுதிப்படுத்தப் பட்டிருந்தது.
வழக்கமாய் பெண்கள் காணாமல் போவது அவ்வாறாகத்தான் இருக்கும். ஆனால் இம்முறை தொலைந்து போன பெண்களுக்குள் ஒரு சிறு ஒற்றுமை இருந்திருந்தது. அவர்கள் பத்து பேருக்கும் வயது 24.
"ஏன்டா பேசாமயே வர்ற?" என்று மீண்டும் அவனை சீண்டினாள் மாலதி.
"இல்ல மாலு. நாளிக்கி உனக்கு பர்த்டேக்கு என்ன கிப்ட் கொடுக்கலாம்னு யோசிச்சிட்டிருக்கேன்."
"அதான் ஆன்றாய்ட் வேணும்னு கேட்டேன்ல."
"நீயே போனை கீழே போட்டு ஒடச்சிட்டு அதுக்கு பலிகடா ஆக்கப் பாக்குற. அப்படித்தான?"
"இப்டி பிடி கொடுக்காமயே பேசினா எப்டிடா?"
"நாளைக்கு உனக்கு எத்தனாவது வயசு?"
"22"
"எது, இந்த இருபத்து மூனுக்கப்புறமா வருமே, அதுவா?"
"இருபத்து நாலுன்னு தெரியிதில்ல. பின்ன எதுக்கு இந்த கேள்வி?"
அவன் பதிலெதுவும் சொல்லவில்லை. சிரித்துக் கொண்டிருப்பான் என்று அவளாக எண்ணிக் கொண்டாள். ஆனால் அவன் வண்டியை ஏதோ தவறான வழியில் ஓட்டிச் செல்வதாய் உணர ஆரம்பிதுக் கொண்டிருந்த சமயத்தில், வண்டியை சட்டென்று நிறுத்தி,
"இறங்கு மாலு." என்றான். அவன் இதற்கு முன் இப்படி கட்டளையிடும் தொனியில் அவளிடம் பேசியதில்லை.
"ஏன், என்னாச்சு? இது எந்த இடம்? ஏன் நாம இங்க வந்திருக்கோம்? ஆன்ட், எனக்கு எதோ தப்பா படுது." என்று அவள் பேசிக் கொண்டிருந்த பொழுது அவள் பின்னால் ஒருவன் நிற்பதாக உணர்ந்தாள்.
திரும்பினாள். ம்ஹும். முடியவில்லை. அதற்குள் அவளது முகத்தில் க்ளோராபார்ம் வைத்து அழுத்தப் பட்டது.
சிம்பிளாக மயங்கிக் கொண்டிருந்தாள்.
புதியவன் அவளை பார்த்துக் கொண்டிருந்தான்.
"பார்த்தது போதும். டாக்டர் காத்துக்கிட்டிருப்பார். போகலாம். இவளை வண்டியில் ஏத்து." என்றான் ஆன்டோ.
இருவரும் அவளை மெட்டடாரில் திணித்து வண்டியை கிளப்பினர்.
மாலதி பலமுறை அரை மயக்கத்தில் கண் திறந்து பார்த்த போது, ஒவ்வொரு பொழுதில் ஒவ்வொரு இடத்தில் இருந்தாள்.
முதல்முறை விழித்தபோது மருத்துவமனை அறையைப் போல ஒரு இடத்தில் படுக்கையில் இருந்தாள். சோதிக்கப் பட்டுக் கொண்டிருந்தாள். இது மருத்துவமனை அறையா, அல்லது சோதனைச் சாலையா?
ஏதேதோ புரியாத புதுப்பெயர்கள் சொல்லி பேச்சுக்குரல்கள். முன்பின் பரிட்சயமற்ற குரல்கள்.
அடுத்த முறை கண் விழித்தபோது வேறு படுக்கையில் தன் மீது யார் யாரோ தன்னை கபளீகரம் செய்வது போலிருந்தது. என் சல்வார் கமீஸ் எங்கே? இவர்கள் யார்?
இம்முறை முனகல்களும் தனது கதறல்களும். தன் குரலே வித்யாசமான ஒலிவடிவங்களை தந்து கொண்டிருந்தது.
அதற்கடுத்த முறையில் நன்றாக தெளிந்திருந்தது. நன்றாக தெரிகிறது. கை கால்கள் மட்டும் அசைவில்லை. தலையை அசைக்க முடிந்தது. அசைத்தேன் இங்கும் அங்கும். மேலும் கீழும். அது ஒரு பெரிய பெட்டி. எனக்கு வலப்புறமாக சில பெண்களும், இடப்புறமாக சில பெண்களும் என்னைப்போலவே கிடத்தப் பட்டிருந்தனர். அவர்களிடம் அசைவில்லை. இன்னும் மயங்கித்தான் இருந்தனர். அவர்களும் என்னைப் போலவே உடைகளின்றி இருந்தனர். முழு நிர்வாணம்.
'சரிதான். அவர்களும் என்னைப் போலவே கடத்தப்பட்டிருக்க வேண்டும்.'
பெட்டி குலுங்கியது. மற்ற பெண்களும் அந்தப் பெட்டிக் குலுங்கலில் விழுத்திருக்க வேண்டும். ஹெல்ப் உதவி, யாராவது காப்பாத்துங்க, நா எங்கே இருக்கேன்? என்னை ஏன் இப்டி பண்ண கவுதம்? போன்ற வசனங்களை வெளியிட்டனர். ஆனால் அதற்கெல்லாம் முத்தாய்ப்பாகக் கேட்டது அந்த கவுன்டவுன்...
பத்து...
ஒன்பது...
எட்டு...
ஏழு...
கவுன்டவுன் எதற்கு சொல்வார்கள்? இது என்ன பெட்டி?
ஆறு...
ஐந்து...
நான்கு...
அய்யோ என்ன கருமம் இது? எங்களை ஏன் இப்டி வதைக்கிறீங்க?
மூன்று...
இரண்டு...
ஒன்று...
இக்னீசன் ஸ்டார்ட்
என்று அந்தக் குரல் சொல்லி முடித்ததும். எங்களது பெட்டி ஜிவ்வென்று தரைமட்டத்திலிருந்து உயர்வதை உணர முடிந்தது.
ஹேய் அங்கே பாருங்கள் என்று ஒருத்தி கத்தினாள். அப்போதுதான் அதை நாங்கள் உணர்ந்தோம். அது... அது... நட்சத்திர மண்டலம். ஆரம்பத்தில் மங்கலாகத் தெரிந்தது நேரமாக ஆக தெளிவாகிக் கொண்டே இருந்தது.
ஷிட் இது ஒரு ராக்கெட். நாங்கள் விண்வெளியை நோக்கி செலுத்தப் பட்டிருக்கிறோம். இல்லை. அதுவுமில்லை. இப்போது பூமிதான். மலைகளும் கடல்களும் தெரிகின்றன. என்று ஆளாளுக்கு புலம்பிக் கொண்டிருந்த போதே, அந்தப் பெட்டி தொப்பென்று தரையில் விழுந்தது.
பெட்டி தானாக திறந்தது. வெளியேறினோம். செடிகளும் மரங்களும் புதிரான அமைப்பில் இருந்தன. நீண்ட நேரமாக எங்களுக்குள் குழப்பம் நிலவியது. இறுதியில் தான் அவள் அந்த வார்த்தையைச் சொன்னாள்.
"இது வேறு ஏதோ கிரகம். நம்ம பூமியில்லை."
தொடரும்.

உரலிகள் :-

No comments :

Post a Comment